சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும். ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools