சத்தீஸ்கரில் வருகிற 7 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.
இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்ட விரோத சூதாட்ட ஆபரேட்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஹவாலா பணத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் மீது ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில் “நம்முடைய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நடந்தது இல்லை. சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல் மக்களின் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்வில்லை. சூதாட்ட ஆபரேட்டர்கள் மற்றும் ஹவாலா பணத்தால் போட்டியிடுகிறார். அவர் ஆட்சியில் இருந்தபோது, பந்தய விளையாட்டில் விளையாடினார்” என்றார்.
சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு 508 கோடி ரூபாய் கொடுத்ததாக, ஒரு ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி இது விசாரணைக்கு உரியது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதற்கு பாகேல், தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை தன்னை குறிவைக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தான் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.