சதமடித்த சுப்மன் கில், கேமரூன் கிரீனை பாராட்டிய கங்குலி – கோலியை நிராகரித்ததால் நெட்டிசன்கள் கடும் தாக்கு

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று முடிந்து பிளே ஆப் சுற்று இன்று துவங்குகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு செல்வதற்காக பிளே ஆப் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இத்தொடரில் முதல் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வழக்கம் போல லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு தனி ஒருவனாக போராடிய விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 197 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி சுப்மன் கில் அதிரடியால் வெற்றிவாகை சூடியது.

சதமடித்த இருவரையும் அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டிய நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் சுப்மன் கில் மற்றும் ஹைதராபாத்துக்கு எதிராக சதமடித்த கேமரூன் கிரீன் ஆகிய இருவரை மட்டும் தனது டுவிட்டரில் பாராட்டினார். அதில் ஒரு வார்த்தை கூட விராட் கோலி குறித்து குறிப்பிடாதது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டெல்லியின் இயக்குனராக பெவிலியனில் அமர்ந்திருந்த கங்குலியை விராட் கோலி முறைத்தார். இறுதியில் அந்த இருவரும் போட்டியின் முடிவில் கை கொடுத்துக் கொள்ளாமல் முகத்தை பார்க்காமல் சென்றது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இருப்பினும் மீண்டும் டெல்லி – பெங்களூரு மோதிய போது அந்த இருவருமே கை கொடுத்துக் கொண்டதால் பிரச்சனை முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் தற்போது ஒரே போட்டியில் சதமடித்தும் சுப்மன் கில்லை பாராட்டிய அவர் விராட் கோலி பற்றி எதுவுமே சொல்லாமல் புறக்கணித்துள்ளது இன்னும் அந்த பகைமையை மறக்கவில்லை என்பதை காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த 2 பேர் சதத்தை பார்த்த நீங்கள் கோலியின் சதத்தை பார்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் அன்றைய நாளில் சதமடித்த 3 பேரையும் வாழ்த்திய சச்சினை பார்த்து கற்றுக் கொள்ளுமாறு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools