சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் – கமல்ஹாசன் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே ‘சட்ட மேலவை’யின் மூலவடிவம்.

விடுதலைக்குப் பின் ஜனநாயகம் மலர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றம் உருவான பிறகு இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது.

ஒரு காலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் ம.பொ.சி, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்று பல ஆளுமைகள் மேலவையில் இடம்பெற்றிருந்தனர்.

செறிவான பல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் தலையீடுகளால் இந்த அவை தன் மாண்பை இழந்தது. கட்சிகள் தங்களுக்கு வேண்டியவர்களைத் திருப்தி செய்வதற்காக மேலவைப் பதவிகளைப் பயன்படுத்திக்கொண்டன. திவால் நோட்டீஸ் கொடுத்த ஒருவரை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததால், சர்ச்சை வெடித்தது. அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்தார்.

திமுக ஆட்சிக்கு வரும் சமயத்திலெல்லாம் மேலைவயைக் கொண்டுவரும் முயற்சியில் தீர்மானங்களை நிறை வேற்றுவதும் அடுத்து வரும் அ.தி.மு.க. அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு.

வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்ற தொடரில் மீண்டும் மேலவை கொண்டுவருவதற்கான தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டு வரவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

காலத்திற்கு ஒவ்வாத இந்த மேலவை எனும் அமைப்பை இந்தியாவின் பல மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. மக்கள் வாழ்வில் எந்த ஏற்றத்தையும் மாற்றத்தையும் உருவாக்காத, அதே சமயத்தில் செலவீனம் பிடித்த இந்த அவையால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் யாதொரு பயனுமில்லை.

‘சட்ட மேலவை’ மீண்டும் கொண்டு வரும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால், இன்றைய அரசியல், பொருளாதார சூழல்களை மனதிற்கொண்டு இந்த முயற்சியைக் கைவிடும்படி தமிழக முதல்- அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools