X

சட்ட ஒழுங்கு, அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், போதைப் பொருளை கட்டுப்படுத்தும் செயல்பாடு குறித்து ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அதற்கு முன்னோட்டமாக தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 3 நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கையாள்வது குறித்தும், அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவது பற்றியும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதை கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட கலெக்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் 14 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றது போல் நாளை நடைபெறும் 2-ம் கட்ட கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

15-ந்தேதி நடைபெறும் 3-ம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.