அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை, தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இது போன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும்.
அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்களை எல்லாம் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைதான் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பணியில் சேரவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் மற்ற பிரசினைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்ட அதிகாரியை தாக்கிய இளநிலை உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.