சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நடிகை கஸ்தூரி முடிவு
நடிகை கஸ்தூரி முதல் முறையாக ‘இ.பி.கோ 302’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சலங்கை துரை இயக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசைய் அவர், “என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. சமீபகாலங்களில் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்ததாகவோ அல்லது அரசியலில் இருப்பவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவோ என் கண்ணுக்கு அகப்படவில்லை. அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு.” என்று தெரிவித்துள்ளார்.