சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகிறது – சபாநாயகர் அப்பாவு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது நீர் இருப்பு 50.50 அடி உள்ளது. இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவுபடி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 5,780 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை 150 நாட்களுக்கு 100 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கவர்னர் மீது ஆளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து கூறியதாவது:-

தமிழக சட்டமன்றம், அமைச்சரவை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் நமது கவர்னர் அதனை படித்து பார்ப்பது கூட கிடையாது. இதனால் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகிறது. சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இறையாண்மை உள்ளது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் இதுபோன்று கவர்னருக்கு அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என அதாவது குறிப்பாக ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்க வேண்டும் என பேசி உள்ளேன்.

இதுவரை அவர்கள் எந்த முடிவும் எடுக்காத நிலையில் நமது முதலமைச்சர், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார். இதுபோன்று அண்டை மாநிலமான கேரளாவும் நீதிமன்றம் சென்றுள்ளது. இப்படி செயல்படும் கவர்னர்களை தற்போது ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது விநோதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news