சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் – கமல்ஹாசன் வலியுறுத்தல்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள்.
சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்து கொள்ள உதவக்கூடியது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அ.தி.மு.க. அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்:375) தி.மு.க. அறிவித்திருந்தது. ஆனாலும், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
இந்தியப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது.
நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறதென்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக் கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது.
தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.