Tamilசெய்திகள்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு – இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த மாதம் 11-ந்தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.

அப்போது, அனைத்து மனுதாரர்களும் தங்களுடைய எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூலை 27-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் மனுதாக்கல் செய்ய முடியாது என இறுதிக்கெடு விதித்தது.

இந்த மனுக்களை தயார் செய்து விசாரணைக்கு தாக்கல் செய்யும் வகையில் மனுதாக்கல் செய்பவர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞரையும், அரசு சார்பில் ஒரு வழக்கறிஞரையும் நியமித்தது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இன்று முதல் உச்சநீதிமன்ற வேலை நாட்களில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சஞ்சய் கிஷன் கவுல், சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கிறது.