X

சட்டத்தை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் வரவேற்று பேசினார். மேயர் பிரியா முன்னிலை வைத்தார். கொசுவலைகளை வழங்கிய பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா காலத்திற்கு பின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏதாவது கோவில்களில் அனுமதி வழங்கவில்லை என்றாலும் குறைந்த அளவாவது திருமணங்கள் நடத்த இணை ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள் கும்பாபிஷேகம் போன்ற பணிகளால் ஒரு சில கோவில்களில் திருமணம் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிறிய அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கோவிலை எடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல இன்னார் இனியவர் என பார்ப்பது இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்று தான் பார்க்கிறோம். யாரும் சட்டத்தை மீறி செயல்பட முடியாது. அந்த கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கைகள் முறையாக கணக்கு வைக்கப்படுகிறதா? மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகள் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? என பார்க்கப்படும். சட்டவிதிகளை மீறி செயல்பட்டால் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது.

தமிழகத்தில் 48 கோவில்களில் முழு அளவில் அன்னைத்தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கோவில்களிலும் தமிழில் அர்ச்சனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மழையின்போது என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷன், கரப்சன், கலெக்‌ஷன் என்ற முறையில் செயல்பட்டதால் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் அடுத்த பருவமழைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம்.ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், மாவட்ட செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு, கணேசன், மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு, பகுதி செயலாளர் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.