X

சட்டத்திற்கு புறம்பானவற்றை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ம் தேதி நிறுத்தி வைத்தது. இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதி விட்டார்.
கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது” என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்கிறார் தமிழக ஆளுநர்.  பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பது, அரசு தயாரிக்கும் ஆளுநர் உரையை படிக்காமல் செல்வது, மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பானவற்றை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். இவைகள் “திருடக்கூடாது” என்பது “இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று சொல்வது போல் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.