சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது – 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை (9-ந்தேதி) தொடங்கியது. இது மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் குறுகிய காலமே நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மிகை செலவுக்கான மானிய கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் வணிகர்களுக்கு வரி வட்டியை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டதுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டியதுடன் வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காவிரி பிரச்சனைக்காக நேருக்கு நேர் சவால் விட்டும் விவாதித்தனர். காவிரி பிரச்சனைக்காக அரசினர் தனித் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார்.