X

சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடியே சட்டசபைக்குள் அமர்ந்து இருந்தனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்’’ என்று குறிப்பிட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இன்னும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

ஆனால் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற செய்தியை சொல்லி வந்த காரணத்தால் பல மாணவர்கள் தங்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும். அதோடு கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‘‘நீட் தேர்வால் இறந்தது இது 14-வது மாணவர். இதற்கு முன்பு 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த 13 பேர் இறந்ததற்கு இன்னொரு கட்சியை சொல்ல முடியாது’’ என்று குறிப்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. மீது சொன்ன ஒரு குற்றச்சாட்டை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

அப்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து விளக்கம் அளிக்க முற்பட்டார். அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.