Tamilவிளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு அறிவுரை கூறிய இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா

இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் டி20 தொடருக்கு ஒரு அணியும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஒரு அணியும் பிரிக்கப்பட்டிருந்தன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தான். கடைசியாக கடந்த நியூசிலாந்துடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், அதன்பின் வங்கதேச தொடரில் தற்போதும் இலங்கையுடனான டி20 தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக பணியாற்றியுள்ளனர். சஞ்சு குறித்து சங்ககாரா கூறியதாவது:-

சஞ்சு சாம்சன் தனது பணி என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதுகுறித்து நன்கு தெளிவு பெற்ற பின்னர் தான் எப்படிபட்ட அனுகுமுறையை வெளிப்படுத்தப்போகிறோம் என முடிவு செய்ய வேண்டும்.

டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைத்தால் அதற்கேற்றார் போல நிதானம் வேண்டும், ஒருவேளை 5வது அல்லது 6வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்கு அதிரடி ஷாட்களுடன் கலக்க வேண்டும். எனவே குழப்பிக்கொள்ளாமல் தெளிவாக விளையாட வேண்டும். இதனையெல்லாம் விட ஒரே ஒரு விஷயத்தை சஞ்சு சாம்சன் செய்யவே கூடாது.

சஞ்சு சாம்சனுக்கு நீண்ட நாட்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இதுதான் தனது கடைசி வாய்ப்பு, இதில் நிரூபித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும் இருந்துவிடக்கூடாது. அவர் இளம் வீரர், நிறைய திறமைகள் உள்ளே உள்ளன. எனவே நிதானமாக ஒவ்வொன்றாக மெதுவாக அவற்றினை கொண்டு வர வேண்டும். அவசரப்பட்டு இழந்துவிடக்கூடாது என சங்ககாரா கூறியுள்ளார்.