டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான். எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. சாம்சனுக்கு மாற்றாக விளையாடிய ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். 6 பவுலிங் ஆப்ஷன்களுடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு தீபக் ஹூடா சரியாக இருந்தார். ஒரு பேட்டர், நன்கு பந்துவீசவும் தெரிந்திருந்தால் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தர முடியும் என ஹர்திக் பாண்ட்யா விளக்கம் தந்துள்ளார்.