இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
94 பந்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அவர் 98 ரன்களை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் விரைவாக 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார். தற்போது விராட் கோலி 267 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், குமார் சங்கக்காரா 363 இன்னிங்சிலும், சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
மேலும், 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டியவர் என்ற சாதனையும் இவரது கைவசமே உள்ளது. மேலும், 47 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.