X

சச்சின், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ் மேன்? – பும்ரா பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஜஸ்பிரித் பும்ரா, முன்னாள் வீரர் யுவராஜ்சிங்குடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, கேள்விகளுக்கு அதிவேகமாக பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் யுவராஜ்சிங் தொடுத்த கேள்விகளும், அதற்கு பும்ரா திக்கித் திணறி அளித்த பதில்களும் வருமாறு:-

யுவராஜ்: விராட் கோலி (இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்), இப்ராகிமோவிச் (சுவீடன் கால்பந்து வீரர்) ஆகியோரில் உங்களது உடல்தகுதி முன்மாதிரி (ரோல் மாடல்) யார்?

பும்ரா: இப்ராகிமோவிச். அவர் எனது உடல்தகுதி முன்மாதிரி மட்டும் அல்ல. பொதுவாகவே அவரை எனது முன்மாதிரியாக வைத்திருக்கிறேன்.

யுவராஜ்: சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை நினைக்கிறீர்கள்?

பும்ரா: இங்க பாருங்க யுவி….நான் வெறும் 4 ஆண்டுகள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அவர்களில் யார் சிறந்தவர் என்பதை கணிக்கும் அளவுக்கு எனக்கு போதுமான அனுபவம் கிடையாது. விராட்-தெண்டுல்கர் அல்லது சச்சின்-கோலி. இந்த கேள்விக்கு பதில் அளிக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னை விட மிக அதிக சர்வதேச போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள்.

யுவராஜ்: நான் உனது (பும்ரா) சுயசரிதையை இங்கு கேட்கவில்லை. உனக்கு உரையாடலின் விதிமுறையை தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு கேள்விக்கும் 5 வினாடிகளுக்குள் பதில் சொல்ல வேண்டும். எனக்கு தெளிவான பதில் தேவை. அவர்களில் உனக்கு பிடித்தமானவர் யார்?

பும்ரா: எனக்கு எல்லோரும் சமம் தான். உங்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறேன். நீங்கள் அடுத்த கேள்வியை கேளுங்கள்?

(ஆனாலும் யுவராசிங் தொடர்ந்து கிடுக்குபிடி போட்டதால் இந்த கேள்விக்கு பும்ரா மழுப்பலாக பதில் அளித்தார்.)

பும்ரா: தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கோலியும் அவரது ரசிகர் தான். அதனால் தெண்டுல்கரை தேர்வு செய்கிறேன்.

யுவராஜ்: சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அஸ்வின் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்?

பும்ரா: ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளாக கேட்கிறீர்கள். நான் அஸ்வினுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சை சிறுவயதில் இருந்தே பார்த்து உள்ளேன். எனது தேர்வு ஹர்பஜன்சிங்.

யுவராஜ்: டோனி அல்லது யுவராஜ்சிங் ஆகியோரில் பிடித்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் யார்?

பும்ரா: ஏன் இப்படி…..அப்பா, அம்மா ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என கேட்பது போல் உள்ளது. இந்திய அணிக்காக நீங்களும், டோனியும் இணைந்து வெற்றியை தேடித்தந்த ஆட்டங்களை பார்த்து வளர்ந்தவன் நான். ஏன் இந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் தான். இருவரில் ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது. இளம் வயதில் நான் உங்கள் இருவரின் ரசிகன்.

இவ்வாறு உரையாடல் நடந்தது.

உரையாடலின் போது பும்ராவை வெகுவாக பாராட்டிய யுவராஜ்சிங், ‘உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் நீ என்று நம்ப வேண்டிய அவசியம். உன்னை பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாதே. மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் அஸ்தஸ்தை எட்டுவதற்குரிய திறமை உன்னிடம் இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகள் நம்பர் ஒன் பவுலராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அணியில் இப்போது நீ பக்குவமடைந்த ஒரு பவுலர். பழகுவதில் இனிமையான வீரர்களில் ஒருவர்’ என்றார்.

Tags: sports news