X

சச்சினுக்கு 2 முறை தவறான தீர்ப்பு வழங்கினேன் – நடுவர் ஸ்டீவ் பக்னர்

india-can-win-in-australia-sachin

சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் சிக்கினார். 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 5 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதும் அடங்கும். 2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கிய அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். 74 வயதான ஸ்டீவ் பக்னர் கூறியதாவது:-

தெண்டுல்கருக்கு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் நான் தவறுதலாக அவுட் கொடுத்திருக்கிறேன். எந்த நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வது கிடையாது. 2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் தெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தேன். பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதும், நான் தவறிழைத்ததும் உணர்ந்தேன். இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரசாக் வீசிய பந்தில் தெண்டுல்கர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன். ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. ஈடன்கார்டனில் அதுவும் இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது.

இத்தகைய தவறுகளால் நான் வேதனைக்கு உள்ளானேன். நானும் மனிதன் தானே. தவறு செய்வது மனிதனின் இயல்பு. தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மனிதன் வாழ்வின் ஒரு பகுதி தான். இப்போதுள்ள டி.ஆர்.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நடுவரின் நம்பிக்கையை பாதிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் துல்லியமான தீர்ப்புகளை வழங்குவதில் அது உதவிகரமாக இருப்பதை அறிவேன். நான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கி அது தவறான தீர்ப்பு என்று உணர்ந்தால் அன்றைய இரவில் சரியாக தூக்கம் வராது. அந்த நினைப்பால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த தொந்தரவுகள் இருக்காது.

இவ்வாறு பக்னர் கூறினார்.

Tags: sports news