தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் நடந்த கலந்துரையாடலில் கூறியதாவது:-
ஒரு நாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் அடித்தார். அவர் எங்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் அச்சாதனையை படைத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் அந்த ஆட்டத்தில் 190 ரன்களை கடந்த பிறகு அவுட் ஆகியிருக்க வேண்டியது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எனது பந்து வீச்சில் நல்ல எல்.பி.டபிள்யூ.வை வழங்க நடுவர் இயான் குட் மறுத்து விட்டார்.
ஏன் அவுட் வழங்கவில்லை என்பதுபோல் நான் நடுவர் இயான் குட்டை பார்த்தேன். அப்போது அவர், சுற்றிப்பாருங்கள் இந்த சமயத்தில் (இரட்டை சதத்தை நெருங்கியபோது) நான் விரலை உயர்த்திருந்தால் ஓட்டலுக்கு திரும்பிச் செல்ல முடியாது (ரசிகர்களால் ஆபத்து நேரிடலாம் என்பதை சுட்டிகாட்டி) என்பதை உணர்த்தும் விதமாக என்னை நோக்கினார் என்று ஸ்டெயின் தெரிவித்தார்.
அந்த ஆட்டத்தில் தெண்டுல்கர் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 200 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியதோடு இந்திய அணி 400 ரன்களை கடக்கவும் வித்திட்டார். இதில் ஸ்டெயின் பவுலிங்கில் தெண்டுல்கர் 31 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். ஆனால் எந்த பந்திலும் எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யவில்லை என்பது அந்த ஆட்டத்தை அலசி ஆராய்ந்தபோது தெரிய வந்துள்ளது.
மேலும் தெண்டுல்கர் 190-களில் இருந்தபோது ஸ்டெயினின் ஓவரில் 3 பந்தை மட்டுமே சந்தித்துள்ளார். அந்த மூன்று பந்தும் பேட்டில் பட்டுள்ளது. ஸ்டெயின் எதை நினைவில் வைத்து இவ்வாறு சொன்னார் என்று ரசிகர்கள் அவரை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.