Tamilசெய்திகள்

சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக மாட்டார் – ஐ.ஜி ரூபா தகவல்

அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

சிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. விசாரணை கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி சிறையில் தண்ட னையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.

இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சிறை விதிகளின்படி ஒரு பெண் குற்றவாளி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆண் குற்றவாளி குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்து இருந்தால், அவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க, கவர்னிடம் பரிந்துரைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி.யும், தற்போது ஐ.ஜி.யுமான ரூபா கூறியதாவது:-

குற்றவாளிகளை, நன்னடத்தையின் பேரில், அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே, விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால், சசிகலா வழக்கை பொருத்தவரை, அந்த விதிமுறைக்குள் வராது. எனவே தண்டனை காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது. எனவே அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *