X

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுக-வில் சேர்க்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் விருப்பம்

ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்.

இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார். இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தபோது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள். சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் தம்பிகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- சசிகலா, தினகரன் ஆகியோர் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

பதில்:- எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடன் இருந்து இந்த இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள். இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அம்மாவின் காலத்தில் இந்த இயக்கத்துக்கு பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு கழகம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. கேள்வி:- இதில் சசிகலாவும், தினகரனும் இருக்கிறார்களா? பதில்:- அவர்கள் எங்களோடு வரவேண்டும் என்றும், நாங்கள் அவர்களோடு போக வேண்டும் என்றும் எந்த நிலையும் இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

கேள்வி:- சசிகலா பெயரை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?

பதில்:- யாராக இருந்தாலும் என்று சொல்லி விட்டேன். இதில் சின்னம்மாவும், டி.டி.வி. தினகரனும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சேருகிறார்களா? நாங்கள் போய் சேருகிறோமா என்ற பிரச்சினையே இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர். அம்மாவின் குடையின் கீழ் இருந்து வாழ்பவர்கள். 30 ஆண்டுகாலம் ஆளுகின்ற பொறுப்பை வகித்த கட்சி. இது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணமாகும். தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கொள்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 9 மணி அளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசரடி இயற்கை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டார். அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தார்.