Tamilசெய்திகள்

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது.

கடந்த புதன்கிழமை மாலை மூச்சுத்திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ஆக்சிஜன் அளவு 79 சதவீதம் இருந்தது. இதையடுத்து ‘ஆன்டிபயோடிக்’ மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆக்சிஜன் அளவுஉயர தொடங்கியது. காய்ச்சல் மற் றும் இருமலும் குறைந்தது.

இந்த நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கான சாதனங்கள் இயங்காததால் சசிகலாவை நேற்று முன்தினம் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.

அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கொரோனா பாதிப்பும் உறுதியானது. இதைத் தொடர்ந்து சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டனர்.

தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு நேற்று அதிக காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்கள் அளித்து வந்த சிகிச்சையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. காய்ச்சலும் குறைந்து விட்டது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் அனைத்தும் சீராக உள்ளது. நுரையீரல் தொற்றும் குறைந்துள்ளது.

ஆனாலும் கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வருகிற 27-ந் தேதி வரை சசிகலாவுக்கு விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

27-ந் தேதிக்கு பிறகு சசிகலா விடுதலையானாலும் கொரோனா சிகிச்சைக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவர் பெங்களூரு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெறுவாரா? அல்லது அங்கிருந்து ஓசூர் வந்து தங்கி ஓய்வெடுப்பாரா? அல்லது சென்னை வந்து விடுவாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இதனால் 27-ந் தேதி கொடுக்கப்படுவதாக இருந்த வரவேற்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சசிகலா பூரண குணம் அடைந்த பிறகு வேறொரு நாளில் வரவேற்பு ஏற்பாடுகளை வைத்து கொள்ளலாமா? என்பது பற்றி அவரது ஆதரவாளர்கள்- அ.ம.மு.க.வினர் ஆலோசித்து வருகின்றனர்.