Tamilசெய்திகள்

சசிகலாவின் உறவினர் இளவரசி நாளை விடுதலையாகிறார்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த ‌2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதுபற்றி சசிகலா தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.

விடுதலைக்கு பின்னர் சிகிச்சை முடிந்து சசிகலா ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். சசிகலாவின் உறவினர் இளவரசியின் தண்டனை காலம் நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

முன்னதாக இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த இளவரசி நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆனார்.

இதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தண்டனை காலம் முடிவடைவதால் இளவரசி நாளை காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். சிறை அதிகாரிகள் உரிய ஆவணங்களில் கையெழுத்து பெற்று அவரை விடுவிக்கின்றனர். தொடர்ந்து இளவரசியிடம் அவரது உடமைகள் ஒப்படைக்கப்படுகின்றன. விடுதலை ஆனதும் இளவரசி சசிகலா ஓவெடுக்கும் விடுதிக்கு செல்கிறார்.

அங்கிருந்து 7-ந்தேதி சசிகலாவுடன் சேர்ந்து சென்னை திரும்ப உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சுதாகரன் இன்னும் அபராத தொகை செலுத்தவில்லை. இதனால் சுதாகரன் விடுதலை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.