X

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரசை சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேரும், சுயேட்சைகள் 6 பேரும் வெற்றிபெற்றனர். இதனால் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம் முன்னிலையில் இன்று காலை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட உமாமகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக அ.தி.மு.க. சார்பில் முத்துலட்சுமி மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மறைமுக தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த முத்துலட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தது.

இதனால் குலுக்கல் முறையில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குலுக்கல் முறையில் தி.மு.க.வை சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.