Tamilசெய்திகள்

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரி!

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 5,200 பேரே பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில் 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை தாங்கினார். துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இதில் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா(23) என்ற எம்.எஸ்சி. படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் எம்.எஸ்சி. படித்து கொண்டு இருக்கிறேன். மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *