X

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏன்? – கனிமொழி எம்.பி கேள்வி

மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.

அதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று விளக்கமளித்தார்.

அதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.