கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு அவர் ஓய்வெடுத்தார்.
பின்னர் இன்று காலை கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு சார்பில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி இன்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காட்சி அரங்கில் கீழடி (வைகை நதிக்கரையில் நகர நாகரீகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல் (சங்ககாலத் தொழிற்கூடம்), மயிலாடும்பாறை (4,200 ஆண்டுகள் பழமையான இரும்பு கால பண்பாடு, முதுமக்கள் தாழி, 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் உள்ளிட்ட தொன்மையான சமூகத்தின் நாகரீகத்தை பறை சாற்றும் அகழ்வாராய்ச்சி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை முழுவதுமாக பார்த்து மு.க.ஸ்டாலின் ரசித்தார்.
மேலும் தி.மு.க அரசு அமைந்து ஓராண்டில் நிகழ்த்திய சாதனைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அதனையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் பங்கேற்றனர். இன்று தொடங்கிய அகழ்வாராய்ச்சி கண்காட்சி வருகிற 25-ந்தேதி வரை நடக்கிறது.
பின்னர் அவர் காரில் அவினாசி ரோட்டில் தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு நடந்த தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் தொழில்களின் தற்போதைய நிலைமை குறித்தும், இன்னும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் மு.க.ஸ்டாலின், திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு அவினாசி ரோடு உள்பட அவர் சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று பிற்பகலில் மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து ஊட்டிக்கு புறப்படுகிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கூடுதல் டி.ஜி.பி தாமரைக் கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்றிரவு கோவைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு சந்திப்பு வரை சாலையோரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் திரண்டிருந்தனர். இதனால் முதல்-அமைச்சர் கையை அசைத்தபடி நடந்து சென்றார். பின்னர் வேனில் ஏறி ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு சாலை நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.