கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்தகட்ட சோதனையும், விசாரணையும் நடைபெறும் என்று தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. கோவை சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
8 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு மையங்களை நடத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.