கோவையில் பிரதமர் மோடி நடத்த இருக்கும் பிரமாண்ட ரோட் ஷோ – 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரமாண்ட பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், கோவையில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றபடி, மக்களை பார்த்து கையை அசைத்து பேச உள்ளார். குறிப்பிட்ட சில இடங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதவிர கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்தின் போது, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பாதுகாப்பு, மக்கள் கூட்டம் வந்தால் எப்படி சமாளிப்பது, எந்த இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் நிறைந்த பகுதி, போக்குவரத்து உள்ள பகுதி, பதற்றமான பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
17-ந்தேதி முதல் கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி கோவை கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்புரம், வடகோவை, சாய்பாபா காலனி, துடியலூர் பகுதிகளில் ரெட்சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.