Tamilசெய்திகள்

கோவையில் நாளை ஒரே நாளில் முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அரசியல் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கோவையில் நாளை ஒரே நாளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (1-ந் தேதி) காலை நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10.15 மணிக்கு கூடலூரிலும், 11.40 மணிக்கு குன்னூரிலும் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து கோவை வரும் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாலையில் கொளத்தூர் தொகுதியிலும், இரவு மைலாப்பூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பேச உள்ளார்.

கோவையில் நாளை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.