கோவையில் நாளை அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் தவுடு, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். ஏற்கனவே கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான் பா.ஜனதா தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.

இதனால் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் உரசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அமித் ஷா சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க. கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். அகில இந்திய அளவில் உறுதிப்படுத்தினாலும் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை. அதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படியானால் தான் இரு கட்சி தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தான் நாளை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தனித்து போட்டியில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை அண்ணாமலை வெளியிடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த செயற்குழு கூட்டத்தை பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools