அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகி வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கோவையில் நாளை மறுநாள் (28-ந்தேதி) மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் கட்சியினருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் 28-ந்தேதி மதியம் 2 மணி அளவில் கோவை சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சேலம், கோவை மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் 600 பேரும், நிர்வாக மற்றும் செயற்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் 50 பேரும் கலந்துகொள்ள இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பூத்கமிட்டிகளை பலப்படுத்தி பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுவாக்க கமல்ஹாசன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாகவும் கோவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் பின்னர் நடைபெற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை தனித்தே சந்தித்தது. உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே களம் கண்டது.
இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல் ஹாசனின் கவனம் கூட்டணி அரசியல் நோக்கி திரும்பியது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் கமல்ஹாசன் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
இந்த கூட்டணி பயணத்தை பாராளுமன்ற தேர்தலிலும் தொடர கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாகவும் கோவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கமல்ஹாசன் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.