X

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது விசாரணை நடந்த எம்.எல்.ஏ.க்கள் விடுதி முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், 2 ஆயிரம் தொண்டர்களும் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு திரண்டு போலீஸ் சோதனைக்கு இடையூறு செய்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனைக்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்புச்சட்டம், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.