X

கோவிஷீல்டு தடுப்பூசி விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் – ஐரோப்பிய மருத்துவ முகமை அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டும்தான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணமாகவும் இது செயல்படும்.

இந்த நிலையில், புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீன் பாஸ் திட்டத்தின் கீழ் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற அச்சம் உள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய மருந்துகள் முகமையின் அதிகாரி ஒருவர் நேற்று கருத்து தெரிவிக்கையில், “டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் நோக்கத்துக்காக, ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும்” என தெரிவித்தார்.

இதற்கிடையே கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்பது தொடர்பான விண்ணப்பம் இன்னும் வரவில்லை என்று ஐரோப்பிய மருத்துவ முகமை தெரிவித்துள்ளது.

அப்படி விண்ணப்பம் வருகிறபோது, விதிமுறைகள்படி பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தது.