கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை – இங்கிலாந்து அறிவிப்பு

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை சமீபத்தில் அங்கீகரித்தது. ஆனாலும் இந்த தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து சென்றால் 10 நாள் தனிமை கட்டாயம் என்பது தொடரும் என அறிவித்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டில் இருந்து இந்தியா வருவோருக்கு 10 நாள் தனிமை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தேவை இல்லை என இங்கிலாந்து நேற்று அறிவித்துள்ளது. இது 11-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கோவிஷீல்டு அல்லது இங்கிலாந்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்கு வரும்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும். கடந்த மாதத்தில் இங்கிலாந்திற்கு முக்கியமான தருணத்தில் ஒத்துழைப்பு கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools