X

கோவில்பட்டியில் விடிய விடிய பெய்த மழை

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய அடை மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி பிரதான சாலை, புதுரோடு, தினசரி சந்தை சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்சேதம் அடைந்தது. காலை முதல் பெய்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி பெய்த மழையால் கோவில்பட்டி தினசரி சந்தைக்குள் மழைநீர் புகுந்து, பொருட்கள் சேதமடைந்தன. நேற்று பெய்த மழையிலும் தினசரி சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது. சந்தைக்குள் சுமார் ஒரு அடி அளவு தண்ணீர் ஓடியது.

திருச்செந்தூர் மற்றும் உடன்குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் கடந்த 8 மாதங்களாக மழையின்றி வறண்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் கனமழை பெய்தது.

நேற்று முன்தினம் மாலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 10 மணி முதல் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. நண்பகல் வரை மழை நீடித்தது. இந்த கனமழையால் தெருக்களில் மழைநீராக ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. தெற்குரத வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது.

ஆறுமுகநேரி ஆத்தூர் காயல்பட்டினம் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் கன மழை பெய்தது. தொடர்ந்து மதியம் 1 மணி வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் ரோட்டோரங்களில் தண்ணீர் தேங்கியது.

ஆறுமுகநேரி பகுதியில் உள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழை ஆரம்பகட்ட வேலைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் திருச்செந்தூர்-மதுரை மெயின் ரோட்டில் புதிதாக தார்ரோடு போட்டதால் சாலை உயரமானது. மேலும் ரோட்டின் ஓரத்தில் பேவர் பிளாக் கல் பதித்து திருச்செந்தூர் கோவில் வரும் பக்தர்களின் வசதிக்காக சாலைகள் போடப்பட்டது.

ஆனால் சாலைகள் சுமார் ஒரு அடிக்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில் ரோட்டில் வலது பக்கம் அதாவது மேல்புறம் சாதாரண இடங்களிலும் பஸ் நிலையங்களிலும் சாலை சுமார் ஒரு அடி உயரத்திற்கு உயர்ந்ததால், சாலைஓரங்களில் பள்ளம் காணப்படுகிறது. கனமழையால் அந்த பள்ளங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சாலை விரிவாக்கப் பணி நடைபெற்ற பொழுது, வலது புறத்தில் மண் அடித்து சாலையை செம்மைப்படுத்துவதாக நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதுவரை மணல் அடிக்காத நிலையில் அந்தப் பள்ளங்கள் அப்படியே இருக்கின்றன. பல இடங்களில் தெருவில் உள்ள தண்ணீரும் ரோடு ஓரத்திற்கு வந்து குளம் போல தேங்கியுள்ளது. எனவே நெடுஞ்சாலைதுறையினர் உடனடியாக பள்ளங்களில் மண்நிரப்பவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 11 மணியளவில் பலத்த மழை பெய்தது. மதியம் 1 மணிவரை மழை நீடித்தது. மாலை வரை சாரல் மழை தூறிக் கொண்டிருந்தது. இதனால் இப்பகுதியில் ரோடுகள், தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது. இந்த மழையால் வெப்பக்காற்று வீசி வந்த இப்பகுதிகளில் இதமான சூழல் நிலவுகிறது.