Tamilசெய்திகள்

கோவா வந்த சொகுசு பயண கப்பலில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மும்பையில் இருந்து கோவா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கார்டேலியா என்ற உல்லாச பயண கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெரியதாக கருதப்படும் இந்த உல்லாச கப்பலை ஒரு தனியார் நிறுவனம் இயக்குகிறது.

இந்த கப்பலில் கடந்த அக்டோபரில் நடந்த போதை பார்ட்டி தொடர்பாகத்தான் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி பல உல்லாச பயணிகள் இந்த கப்பலில் மும்பையில் இருந்து கோவா வந்தனர். மர்மகோவா துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்த அக்கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

அப்போது கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, கப்பலில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் ஆகிய 2 ஆயிரம் பேருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அதற்காக ஒரு மருத்துவக்குழு கப்பலுக்கு வந்தது.

இந்த பரிசோதனையில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை என கோவா சுகாதார மந்திரி விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.

கப்பலில் நேற்றும் கொரோனா பரிசோதனை தொடர்ந்தது. சோதனை முடிவுகள் தெரியும்முன் கப்பலில் இருந்து யாரும் கீழே இறங்கக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்துவிட்டனர். அதனால், புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு வந்த உல்லாச பயணிகள் தவித்து போயினர்.