கோவா சட்டசபை தேர்தல் – 22 தொகுதிகளில் போட்டியிடும் சிவசேனா
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு பா. ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமை கொண்ட கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.-வை எதிர்த்து களம் இறங்க இருக்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனா, கோவா சட்டசபை தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா 22 தொகுதிகளில் போட்டியிடும். வெற்றிக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாங்கள் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. எங்களுடைய அமைப்பு போதுமான வலிமை. திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தாவிலிருந்து போட்டியிடும்போது, மகாராஷ்டிராவில் இருந்து நாங்கள் போட்டியிடுவதற்கு உரிமை உள்ளது.
மகாராஷ்டிராவில் எங்களுடைய ஆட்சியை பார்த்து இருப்பீர்கள். தற்போது மகாராஷ்டிராவில் எவ்வாறு சிவசேனா ஆட்சி செய்து வருகிறதோ, அதே போன்று கோவாவிலும் ஆட்சி நடத்தும். சிவசேனா மற்றும் கோவா உணர்ச்சி பிணைப்பை பகிர்ந்துள்ளன’’ என்றார்.