Tamilசெய்திகள்

கோவா சட்டசபை தேர்தல் – பண பரிவர்த்தனையை கண்காணிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

கோவாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. அதனால், கோவாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி குணால் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் காலத்தில் பணம், பரிசுகள், பொருட்கள் விநியோகிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் வங்கிகள் பண பரிமாற்றம் விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இதுகுறித்து கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி குணால் கூறியதாவது:-

பண பரிவர்த்தனையின் போதும், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்கு வேன்கள் மூலம் கொண்டு செல்லும்போதும்  முறையான ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற கிளைகளில் பணத்தை டெலிவரி செய்யும்போது, தனியார் ஏஜென்சிகள் அல்லது வங்கி வேன்கள் வங்கி வழங்கிய முறையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநில தகவல் விளம்பரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்து வங்கியும் வழக்கத்திற்கு மாறான மற்றும் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை கண்காணித்து, வரவிருக்கும் மாநில தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்தகைய பரிவர்த்தனை கண்டறியப்பட்டால், மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மேலும், வங்கிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சி விஜில் செயலியில் எந்தவொரு தேர்தல் விதிமுறை மீறல் குறித்தும் குடிமக்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.