Tamilசெய்திகள்

கோவா அரசு மருத்துவமனையில் 74 கொரோனா நோயாளிகள் மரணம்!

கோவா மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பிவருகின்றன. இன்று காலை அரசு வெளியிட்ட தகவலிபடி, 24 மணி நேரத்தில் 2491 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 62 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் மிகப்பெரிய  மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் 74 நோயாளிகள் இறந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்து இன்று அதிகாலை 6 மணிக்குள் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் மாநிலத்தில் ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். இதுபற்றி மும்பை  உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் மாநில அரசு விளக்கம் அளித்தது. ஆக்சிஜன் டிராலிகளை டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து சிலிண்டர்களை இணைக்கும்போது சிக்கல் ஏற்பட்டதாக கூறியது. இப்படி கூறுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், இன்று மாலையில் அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.