கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் மோடி இன்று காலை கோவாவுக்கு சென்றார். அங்கு அவர் ஒ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் திறந்து வைத்தார். மேலும் 2024 இந்திய எரிசக்தி வாரத்தைத் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடி இன்று பிற்பகலில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகம், தெற்கு கோவாவில் 100 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதியை தொடங்கி வைக்கிறார். பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸை இணைக்கும் சுற்றுலா பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும், தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்குகிறார்.