Tamilசெய்திகள்

கோவாவில் இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் மம்தா பானர்ஜி

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் இப்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சி பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன. கோவாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இம்முறை ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.

காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. நேற்று கோவாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது பல நிர்வாகிகள் காங்கிரசில் இருந்து விலகி அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் கோவாவில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.