X

கோவாவின் எம்.ஜி.பி கட்சி இரண்டாக உடைந்தது! – 3 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்

கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதையடுத்து, சட்டசபையில் ஆளும் பாஜக கூட்டணியின் பலம் குறைந்தது. எனவே, தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பாஜக கூட்டணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்த நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பிரமோத் சாவந்துக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் மனோகர் அஜாங்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து பிரிந்து புதிய அணியை உருவாக்கினர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு தொடர்பாக நள்ளிரவில் இருவரும் சபாநாயகர் மைக்கேல் லோபோவிடம் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் துணை முதல்வருமான சுதின் தவாலிகர் கையெழுத்திடவில்லை.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகப் பிரிந்து, மற்றொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

தற்போது 2 எம்எல்ஏக்கள் வருகையால் கோவா சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கட்சியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாகவும், அதனால் சாவந்த் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் எம்ஜிபி கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர் நேற்று மிரட்டல் விடுத்திருந்தார். இன்று (புதன்கிழமை) நடக்கும் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், 2 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

2012ல் இருந்து பாஜகவுடன் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் சுதின் தவாலிகர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

கூட்டணி கட்சிகளை பாஜக மிரட்டுவது இதன்மூலம் நிரூபணமாகியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் காவ்தாங்கர் விமர்சித்துள்ளார்.

Tags: south news