X

கோழிக்கறி சாப்பிட்டு கொரோனா வைரஸ் வந்தது என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு!

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் நேற்று நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில் கறிக்கோழி, முட்டைக்கோழி மற்றும் முட்டை விலை கடுமையாக சரிவடைந்து உள்ளது. 450 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை தற்போது 125 காசுகள், 150 காசுக்கு கீழ் விற்கும் நிலைக்கு வந்து உள்ளது.

கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி ரூ.10-க்கு விற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான வதந்தியை சமூக வலைதளம் மூலம் பரப்பியதே ஆகும்.

இந்த வதந்தி எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் வந்தது என்று யாராவது நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். தேக்கம் அடைந்த முட்டையை, கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறோம். கொரோனா தொடர்பான வதந்தியால் இதுவரை கோழி மற்றும் முட்டையில் ரூ.500 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news