கோழிக்கறியில் கோரோனா வைரஸ்! – வதந்தி பரப்பிய சிறுவன் கைது
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2,700-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை உயிர்பலி ஏற்படவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றி பீதி நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் வந்தவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள இறைச்சி கடையில் பிராய்லர் இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி ஏற்பட்டது.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.
இந்த தகவலால் நெய்வேலியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். மக்கள் கோழி இறைச்சி கடை பக்கம் செல்லவில்லை. மேலும் வெளியூர்களில் உள்ளவர்கள் அங்கிருந்து செல்போன் மூலம் நெய்வேலியில் உள்ள உறவினர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல் வாட்ஸ் அப்பில் திரும்ப திரும்ப வந்ததால் தனியார் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பக்ருதீன் அலிமுகமது வியாபாரம் பாதிக்கப்பட்டது. அவர் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் அவர் புகார் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 20 ஆண்டுகளாக நெய்வேலி வட்டம் 29-ல் சூப்பர் பஜாரில் சிக்கன் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு நெய்வேலி புதுநகர் 21-வது வட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (வயது15) அடிக்கடி வந்து சிக்கன் வாங்கி செல்வான்.
கடந்த சில நாட்களாக சிக்கனை கடனுக்கு கொடுக்கும்படி சக்திவேல் என்னிடம் கேட்டான். நான் கடன் கொடுக்கவில்லை. எனவே என் கடை மீது களங்கம் ஏற்படுத்த நடிகர் கவுண்டமணி பாணியை சக்திவேல் கடைபிடித்தான்.
உதயகீதம் சினிமா படத்தில் நடிகர் கவுண்டமணி தேங்காய் விலை அதிகமாக இருந்ததால் தேங்காயில் வெடிகுண்டு உள்ளதாக வதந்தி பரப்புவார். இதனால் தேங்காய் விலை வீழ்ச்சியடையும், அதேபோன்று என் கடையில் உள்ள சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ் அப்பில் சக்திவேல் தவறான தகவலை பரப்பினான்.
இந்த வதந்தியால் எனது சிக்கன் கடை வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனது வாடிக்கையாளர்களும், குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சிறுவன் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து நெய்வேலி தெர்மல் போலீசார் சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது தவறான தகவலை பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான சிறுவன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.