கோள்கள் இணையும் நிகழ்வு 3 நாட்கள் நடக்கிறது!

சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள். இந்த கோள்சாரா அமைப்பு நாளை (புதன்கிழமை) தொடங்கி 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த அமைப்பு நெருப்புக்கும், காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோள்சாரா கிரக சேர்க்கையாகும்.

இதுகுறித்து சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. கெப்ளரின் 3-வது விதிப்படி சூரியன் மற்றும் கோள்கள் இருக்கும் தொலைவை பொறுத்து அது சூரியனை சுற்றிவரும் காலம் மாறுபடும். சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும். உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன. எனவே இதுபோன்ற கோள்கள் ஒருங்கமைவது அவ்வப்போது நிகழும்.

இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசை நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. நிலவும், சூரியனும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் நிகழ்வது போல கடல் அலை எழுச்சி ஏற்படும்.

இது மிக அதிகமாகவோ அல்லது அழிவை உண்டாக்கும் வகையில் இருக்காது. ஆனால் வழக்கமான அமாவாசை காலங்களில் இருப்பது போல கடல் அலை எழுச்சி இருக்கும்.

இதுதவிர பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news