கோலி, ஸ்மித் போல வர விரும்பும் ஆஸ்திரேலிய அறிமுக வீரர்!
ஆஸ்திரேலிய அணியின் புது நட்சத்திர வீரராக உருவாகியிருப்பவர் மார்னஸ் லாபஸ்சாக்னே. கடைசி ஐந்து டெஸ்டில் ஒரு இரட்டை சதத்துடன் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ரன்மெஷின் என்று அழைக்கப்படுகிறார். விரைவாக 1000 ரன்களை எட்டி டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 14 டெஸ்ட் போட்டியில் 1459 ரன்கள் குவித்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரிலும் ஃபார்ம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள லாபஸ்சாக்னே, இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக ஆசை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘நீங்கள் பார்க்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை போன்று ஆக விரும்புகிறேன். அவர்கள் நீண்ட காலமாக, அதாவது ஐந்து ஆறு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமல்ல. மூன்று வகை கிரிக்கெட்டிலும்.
இந்த கோடைக்காலத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்பிடுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை நான் தொடர்ந்தால், எனக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆக இருப்பது உண்மையிலேயே ஆர்வமிக்க சவால். இந்தியா மிகவும் கடினமான கண்டிசன். அவர்கள் மிகவும் வலிமையான அணி. சவாலை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு, அதிக அளவு எதிர்பார்ப்பு இல்லாமல், பந்துக்கு பந்து, போட்டிக்கு போட்டி என செல்ல வேண்டும்.
இந்தியாவில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் போட்டியின் மிகப்பெரிய பகுதி. அதனால் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற எனதில் திட்டத்தில் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார்.