இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கும் இவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளவில்லை. கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக அயோத்தியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் விராட் கோலியே போன்று இருந்தார். அவரது நடை, செயல் உண்மையான விராட் கோலி போன்றே இருந்தது.
மேலும், இந்திய அணியின் ப்ளூ ஜெர்சி அணிந்திருந்தார். இதனால் விராட் கோலிதான் வந்துள்ளார் என நினைத்த அவரது ரசிர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்தனர். பின்னர்தான் அவர் போலி விராட் கோலி எனத் தெரியவந்தது. இருந்த போதிலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
தனிப்பட்ட காரணத்திற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி, அதன்காரணமாகத்தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.