4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்கியது. பல சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 அன்று நடைபெற்றது.
மதியம் தொடங்கிய இப்போட்டியில் “டாஸ்” வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டியில், 13-வது ஓவர் நிறைவடையும் நேரத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்திருந்தது. இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் தீவிர கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.
அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து ஒரு நபர், மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்தார். இவரை கண்ட பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுக்க முயன்றனர். முகத்தை துணியால் மூடி, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் வேகமாக ஓடி, இந்திய ஆட்டக்காரர் விராட் கோலிக்கு அருகே சென்றார். அவரை நெருங்கிய அந்த நபர், ஒரு சில வினாடிகள் விராட் கோலியின் தோளில் கை போட முயன்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி வெளியேற்றினர்.
இச்சம்பவத்தால் சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அழைத்து சென்றனர். அத்துமீறிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆட்டம் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றது.